கடந்த 2009 ஆம் ஆண்டு ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் வகையில், டென்மார்க் (Denmark) எங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்கள் இந்த வாரம் தேவாலயங்கள் மற்றும் இந்து ஆலயங்களில் ஒன்று கூடி, முள்ளிவாய்க்கால் நினைவு வார வழிபாடுகளை நடத்தியுள்ளனர்.




ஹோல்பெக் (Holbæk), நெஸ்ட்வெட் (Næstved) மற்றும் கிரின்ஸ்டெட் (Gridsted) ஆகிய நகரங்களில் இத்தொடர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. தாயகத்திலும் உலகெங்கிலும் வாழும் ஈழத் தமிழர்களால் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் உத்தியோகபூர்வ நினைவேந்தலின் ஒரு பகுதியாகவே இக்கூட்டுப் பிரார்த்தனைகள் அமைந்திருந்தன.
ஹோல்பெக் (Holbæk): கடந்த மே 13 அன்று புனித எலிசபெத் தேவாலயத்தில் (St. Elizabeth Church) உருக்கமான அஞ்சலி வழிபாடும் புனித திருப்பலியும் (Holy Mass) ஒப்புக்கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தி, நினைவேந்தல் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
நெஸ்ட்வெட் (Næstved): மே 15 வெள்ளிக்கிழமை அன்று இங்குள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் விசேட நினைவுப் பிரார்த்தனை வழிபாடுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. தமிழ் மக்கள் நெய் விளக்குகளை ஏற்றி, பக்திப் பாடல்களுடன் மறைந்த ஆன்மாக்களின் ஆத்ம சாந்திக்காக கூட்டுப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
கிரின்ஸ்டெட் (Grindsted): மே 17 ஞாயிற்றுக்கிழமை அன்று அங்குள்ள தேவாலயத்தில் கத்தோலிக்க மதகுரு ஜார்கே ப்ரைஸ் (Reverend Father Bjarke Friis) தலைமையில் விசேட திருப்பலி நடத்தப்பட்டது. தேவாலயத்தினுள் அமைக்கப்பட்டிருந்த நினைவிடத்தில் முதன்மைச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவேந்தலின் முக்கியத்துவம் குறித்த உரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.

இறுதிப் போரின் போது குண்டுவீச்சுகளுக்கும் பட்டினிக்கும் மத்தியில் சிக்கியிருந்த தமிழ் பொதுமக்கள் அனுபவித்த துயரங்களின் அடையாளமாக மாறிய பாரம்பரிய ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்தன.