செம்மணி மனித புதைகுழி என்பது சர்வதேச நீதியை பொறுப்புக்கூறலை வேண்டி நிற்கும் விடயம் என கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஹெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஒட்டாவாவில் நேற்று இடம்பெற்ற செம்மணி மனிதப் புதைகுழி குறித்த மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
சமீபகாலத்தில் 600க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிவருகின்ற தகவல்கள் இலங்கையில் நீதிக்காக மனித உரிமைகளுக்காக போராடும் எங்களுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இது யுத்த குற்றங்களுக்காகசர்வதேச சமூகத்தின் கவனத்தை சர்வதேச சமூகத்தின் நீதியை பொறுப்புக்கூறலை எதிர்பார்த்திருக்கும் ஒரு விடயம்.
இலங்கை என்பது பல வருடங்களாக சட்டத்தின் ஆட்சி இடம்பெறாத சர்வதேச குற்றங்களுக்காக பொறுப்புக்கூறல் இல்லாத ஒரு நாடு. யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உட்பட சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாத நாடு.
செம்மணி மனித புதைகுழியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை இலங்கையில் இனப்படுகொலை காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மிகப்பெரும் வேதனையையும் துயரத்தையும் அளித்துள்ளன.
அதேவேளை தமிழ் சமூகத்திலும் சர்வதேச அளவிலும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு உத்வேகத்தையும் அளித்துள்ளது.
ஆகவே நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய உறுதிஎடுத்துக் கொள்ளவேண்டிய தருணம் இது.
பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நோக்கிய ஒட்டுமொத்த பயணம் என்பது ஒரு தலைமுறையிலிருந்து மற்றைய தலைமுறைக்கு கையளித்தல் ஆகும்.
இலங்கையில் இடம்பெற்றவைகளுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான கனடாவின் அர்ப்பணிப்பை நான் மீண்டும் உறுதிசெய்கின்றேன்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான முதன்மை குழுவில் கனடாவும் இடம்பெற்றுள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணைகள் இடம்பெறுகின்றன, 2023 இல் கனடா இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை அங்கீகரித்ததுடன் இலங்கையின் இரண்டு ஜனாதிபதிகள் உட்பட அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை விதித்தது, கனடாவிற்குள் நுழைவதற்கு அவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.
ஆனால் இது மாத்திரம் போதுமானதல்ல, சமூகத்திற்கும் உண்மைக்காகவும் பொறுப்புக்கூறலிற்காகவும் இன்னமும் நிறையவிடயங்களை செய்யவேண்டியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.