செம்மணி புதைகுழியில் இருந்து நேற்று(17) 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் குழந்தை ஒன்றும் சிறுவர் ஒருவருடையுமாக 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 27 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்றது.
இன்று அகழ்வு பணிகளின் போது, என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் ஒரு இரும்பு வலயம் ஒன்று சான்று பொருள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி ஒருவருடைய பிளாஸ்ரிக் காப்பை ஒத்த பொருள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 380 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 362 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் அதிக எண்ணிக்கையான மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி காணப்படுகின்றது. இது பாரிய சந்தேகத்தையும், மக்கள் மத்தியில் பரவலாக அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.