சென்னை:
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, அதிமுக அதிருப்தி அணியின் முக்கியத் தலைவர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும், ஜூலை 2-ஆம் தேதி தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தனி அணி உருவானது. இதில் எஸ்.பி. வேலுமணி சமாதானமாகி எடப்பாடி பழனிசாமி தரப்புக்குத் திரும்பிய போதிலும், சி.வி. சண்முகமும், சி.விஜயபாஸ்கரும் தொடர்ந்து அதிருப்தியிலேயே இருந்து வந்தனர்.
ஏற்கனவே அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துவிட்டனர். அதன் தொடர்ச்சியாக, சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் ராஜினாமா செய்தனர். இவர்களது இணைப்பு விழா, பாக்கியராஜ் மறைவு உள்ளிட்ட காரணங்களால் நேற்று நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது ஜூலை 2-ஆம் தேதி, மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் மிக பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்களது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இருவரும் தவெகவின் கொள்கைகளை ஏற்று அதில் இணையவுள்ளனர். இவர்களுடன் திருச்சியைச் சேர்ந்த வளர்மதி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோரும் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தவெகவில் இணையவுள்ள சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்குக் கட்சியில் மிக முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் வலுவான கோட்டையாகக் கருதப்பட்டவர்கள் அடுத்தடுத்து வெளியேறி தவெகவில் இணைவது, எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அதிமுகவின் சரிவை மேலும் வேகப்படுத்தியுள்ளது.
#CVijayabaskar #MRVijayabaskar #TVK #ADMK #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #Defection #Politics2026 #PoliticalShift #TamilNaduPolitics #PoliticalStrategy #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #AssemblyDebate #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash’