சிறுவர் ஆரம்ப கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு வெளியீட்டு விழா கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்றைய தினம் மாலை கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது, தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) இணையத்தளமான (channelnie.nie.ac.lk) சானல் NIE இணையப் பக்கத்திலும் பாடத்திட்டக் கட்டமைப்பு வெளியிடப்பட்டது.
தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள ஆரம்பக் கல்வி முறைகளில் காணப்படும் வேறுபாடுகளைக் கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மட்டங்களிலான ஆரம்பக் கல்வி நிலையங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடனும், உலகளாவிய நிகழ்ச்சி நிரல்களுக்காகவும், இலங்கைக் குழந்தையின் ஆரம்பப் பருவ நலனை மேம்படுத்துவதற்காகவும் தேசிய கல்வி நிறுவகம் (NIE) இந்த கல்விப் பாடத்திட்டக் கட்டமைப்பைத் தயாரித்துள்ளது.
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணங்க, முன் பள்ளி கல்விக்கான தேசியக் கொள்கையைத் தயாரித்தல் மற்றும் அதன் செல்லுபடியாகும் தன்மையைச் சோதித்தல் ஆகியன தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு, சுகாதார மேம்பாட்டுப் பணியகம், குடும்ப நலப் பணியகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு மற்றும் யுனிசெஃப் (UNICEF) இலங்கை ஆகிய அனைத்து நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
இந்த முன்மொழியப்பட்ட முன் பள்ளி கல்விக்கான கொள்கை 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், யுனிசெஃப் நிறுவனத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் கல்வி அமைச்சு, பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவகம் ஆகியன இணைந்து அடுத்த வாரம் துல்ஹிரிய மாஸ் அதீனா (MAS Athena) நிறுவனத்தில் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சித் திட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
இந்நிகழ்வில், பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி டப்ளியூ.எம்.டி.டி. விக்ரமசிங்க, யுனிசெஃப் நிறுவனத்தின் சார்பில் நாட்டுப் பிரதிநிதி எம்மா ப்ரிங்கன் (Emma Bringhan), தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
By C.G.Prashanthan