மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்ச சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிராந்தி ராஜபக்சவை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
நிதிகுற்றங்கள் தொடர்பிலான பொலிஸ்விசாரணை பிரிவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ள நிலையில் சிராந்தி ராஜபக்ச புதன்கிழமை கொழும்பிலிருந்து சிங்கப்பூர் சென்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிராந்தி அங்கிருந்தே சிங்கப்பூர் பயணமாகின்றார் என்பதை அறிந்த நிதிகுற்றங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணை பிரிவின் அதிகாரிகள் உடனடியாக விமானநிலையத்திற்கு விரைந்து விசாரணைக்கான அழைப்பாணையை வழங்கியிருந்தனர். வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக 24ம் திகதி ஆஜராகுமாறு கோரும் அழைப்பாணையை சிராந்தி சார்பில் அவரது உறவினர் ஒருவர் பெற்றுக்கொண்டார்.
சிராந்தி ராஜபக்ச 19ம் திகதி நாடு திரும்புவார் 24ம் திகதி வாக்குமூலத்தை வழங்குவார் என அவரது குடும்ப உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தங்காலையில் உள்ள சிராந்தி ராஜபக்சவின் வீட்டிற்கும் அழைப்பாணையை அதிகாரிகள் அனுப்பிவைத்திருந்தனர்.