நாட்டை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் நோக்கில் அரச துறைப் போராட்டங்களுக்குப் பின்னால் திட்டமிட்ட சதியொன்று முன்னெடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அரச நிதியில் மேலதிக சுமையை ஏற்படுத்தும் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், 2028 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக 150 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
‘வரவு செலவுத் திட்டமும் உழைக்கும் மக்களும்’ எனும் தொனிப்பொருளில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போது மேலதிக சம்பள உயர்வுகளையும் கொடுப்பனவுகளையும் வழங்குவதானால், அரசாங்கம் கடன் தொகையை அதிகரிக்க வேண்டும் அல்லது மூலதனச் செலவுகள், சுகாதாரம் மற்றும் ஏனைய அத்தியாவசியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைக்க நேரிடும் என அவர் விளக்கமளித்தார். வெறுமனே அன்றாட வாழ்க்கையை நடத்தும் பொருளாதார நிலையிலிருந்து மாறி, தேசியப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி விரிவுபடுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதால், மூலதனச் செலவுகளைக் குறைக்க அரசாங்கம் தயாராக இல்லை எனவும் அவர் கூறினார்.
நாட்டின் நிதி நிலைமை குறித்துச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 2027 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 6,230 பில்லியன் ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள போதிலும், சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடன் சேவைகள் உள்ளடங்கலாக மொத்தச் செலவினம் 7,035 பில்லியன் ரூபாயாகக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
சம்பளம் மற்றும் கடன் மீளச் செலுத்துதலுக்குக் கூட அரச வருமானம் போதுமானதாக இல்லை என்பதால், திறைசேரியில் ஏற்படும் 805 பில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறையைக் கடன் மூலமே ஈடுசெய்ய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். “2027 ஆம் ஆண்டிற்கான கடன் எல்லையை 3,800 பில்லியன் ரூபாயாக நிர்ணயித்துள்ளோம். மூலதனச் செலவுகள் மற்றும் சமூக நலன்புரித் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளும் கடன்கள் மூலமே நிதியளிக்கப்பட வேண்டியுள்ளது,” என அவர் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காலத்துடன் தற்போதைய நிதி நிலைமையை ஒப்பிட்ட ஜனாதிபதி, அக்காலப்பகுதியில் அரசாங்கம் 700 பில்லியன் ரூபாய் மேலதிகப் பற்றுடன் (Overdraft) இயங்கியதாகவும், ஆனால் தற்போது திறைசேரியில் 700 பில்லியன் ரூபாய் வைப்புத் தொகை கையிருப்பில் உள்ளதாகவும் கூறினார்.
நாடு மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் எனக் கூறப்படும் கருத்துக்களுக்குப் பதிலளித்த அவர், தேசிய வரவு செலவுத் திட்டத்தில் ஏற்படும் தாக்கத்தைக் கருத்திற் கொள்ளாமல் போராட்டங்களுக்குப் பணிந்து அனைத்துச் சம்பள உயர்வுகளையும் கொடுப்பனவுகளையும் வழங்கினால் மாத்திரமே அவ்வாறான நிலை ஏற்படும் என எச்சரித்தார். “கோரிக்கைகளை முன்வைத்து வரவு செலவுத் திட்டத்தில் மேலதிக சுமையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளத் திட்டமிட்ட சதி நடக்கிறது. அந்தப் பொறியில் நாம் விழ மாட்டோம்,” என ஜனாதிபதி கூறினார்.
2028 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 400 பில்லியன் ரூபாய் மேலதிக நிதியை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், அதில் 250 பில்லியன் ரூபாய் மூலதனச் செலவுகளுக்கும், 150 பில்லியன் ரூபாய் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கும் ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்தார்.
மேலும், தனிநபர் வருமான வரியின் உச்சபட்ச விகிதமான 36 வீதத்திற்கான மாதாந்த வருமான எல்லையை 2028 வரவு செலவுத் திட்டத்தில் 500,000 ரூபாயாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய வரி கட்டமைப்பின் கீழ் 358,333 ரூபாய்க்கு மேல் மாதாந்த வருமானம் பெறுவோருக்கு 36 வீத வரி அறவிடப்படுவதுடன், 2027 வரவு செலவுத் திட்டத்தில் இவ்வெல்லையை 433,333 ரூபாயாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்க்கட்சி அரசியல் சக்திகள் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மதக் குழுக்களையும் உழைக்கும் மக்களையும் பயன்படுத்த முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குற்றம் சாட்டினார்.