கேரள மாநிலம், சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய முதல் இரு நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசும், தேவசம் போர்டு நிர்வாகமும் தடுமாறுகிறது.
சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நேற்று முன் தினம் காலை துவங்கியது. இதற்காக நவ.,16 மாலை நடை திறந்தது முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங்கில் 20,000 பேரும் அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்பதிவு துவங்கிய சில நாட்களிலேயே நவ., மாதத்தின் அனைத்து நாட்களிலும் முன்பதிவு நிறைவு பெற்றது. தற்போது டிச.,10 வரையிலும் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது.
கார்த்திகை 1ம் தேதியான நேற்று முன்தினமே, பம்பையிலும், சன்னிதானத்திலும் கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய திட்டமிடல்கள் இல்லாததால், எருமேலியில் இருந்து சென்ற பக்தர்கள் சன்னிதானம் வர முடியாமல், பாதி வழியில் நிறுத்தப்பட்டனர்.
இதுகுறித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.ஜெயக்குமார் கூறியதாவது: பம்பையில் பக்தர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் மலையேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பம்பையில் இருக்கும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நிலக்கல்லில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும் என அவர் கூறினார்.