குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும், நவீன குற்றவாளிகளை ஒடுக்குவதற்குத் தேவை என சட்டம் ஒழுங்கு அமுலாக்கப் பிரிவினரால் கோரப்படும் சட்ட வழிமுறைகளைத் தாமதப்படுத்துவதற்கும் இடையில் நாடாளுமன்றம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, ‘சி-22’ சட்டமூலத்தை (Bill C-22) முன்னோக்கி நகர்த்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளார்.
டிஜிட்டல் சான்றுகளுடன் (Digital evidence) பெருகிவரும் குற்றங்கள் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, பொலிஸாருக்கு மேம்படுத்தப்பட்ட புதிய அதிகாரங்கள் தேவை என்று அமைச்சர் வாதிட்டுள்ளார். அதேவேளை, இச்சட்டமூலம் தனிநபர் தரவு பாதுகாப்பு (Privacy), கண்காணிப்பு (Surveillance) மற்றும் தனிப்பட்ட தரவுகளை அரசாங்கம் அணுகுதல் ஆகிய விவகாரங்களில் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என விமர்சகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
‘சி-22’ சட்டமூலம் தொடர்பான விவாதமானது, தற்போதைய நாடாளுமன்றத்தின் பொதுப் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஒரு முக்கிய விடயமாக மாறியுள்ளது. இதன் ஆதரவாளர்கள் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் அதேவேளை, இதன் எதிர்ப்பாளர்கள் இச்சட்டமூலம் மக்களின் சிவில் உரிமைகளில் (Civil liberties) ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான பாதிப்புகள் குறித்து எச்சரித்து வருகின்றனர்