திருவாரூர்:
“இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்குத் தவெக அமைச்சரவையில் இடம் பெறும் கொள்கை திட்டமும் இல்லை; அதுபோன்ற ஒரு முயற்சியிலும் நாங்கள் ஈடுபடவில்லை” என சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய மு.வீரபாண்டியன், “மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையிலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் குறுக்கீடுகள் இல்லாத ஒரு சுமுகமான சூழல் நிலவ வேண்டும் என்பதற்காகவுமே தவெக-வின் புதிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதற்கு எங்களது கட்சியின் தமிழ் மாநிலக் குழுவும் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பல நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய தவெக அரசிலும் அத்தகைய மக்கள் நலத்திட்டங்கள் தங்குதடையின்றித் தொடர வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்றார்.
தொடர்ந்து அமைச்சரவை மற்றும் குதிரை பேரம் குறித்த சர்ச்சைகளுக்குப் பதிலளித்த அவர், “விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் நலன் மட்டுமே எங்களுடைய தற்போதைய எதிர்பார்ப்பு ஆகும். இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய மூன்று கட்சிகளும் தமிழகத்தில் முற்போக்கு சிந்தனை வளர வேண்டும் என்ற ஒரே புள்ளியில் இருந்துதான் புதிய அரசை ஆதரிக்கிறோம். குதிரை பேரம் பற்றி அறியாதவர்கள் கம்யூனிஸ்டுகள்; எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் இது குறித்துப் பேசினாலும், அத்தகைய மலிவான சிந்தனையில் எங்கள் கட்சி ஒருபோதும் ஈடுபடாது. இது போன்ற பேரங்களில் எங்களுக்கு எந்தவித அனுபவமும் இல்லை. ஒடுக்கப்பட்ட, எளிய மக்களின் வாழ்வாதாரம் மட்டுமே எங்களுடைய சிந்தனையாக உள்ளது. ஒருவேளை குதிரை பேரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்பட்டால், சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்” எனத் தெளிவுபடுத்தினார்.
#MuVeerapandian #CPI_Leader #CPI_Statement #VijayAsCM #BreakingNews #May17 #ThiruvarurNews #TamilNaduPolitics #TVK_Government #NoCabinetBerth #LeftPartiesSupport #CommunistIdeology #ThalapathyVijay #NewGovernmentTN #ProgressiveFront #AlliancePolitics #AntiHorseTrading #CommonManVoice #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_