கோவை
காவிரி நதிநீர் விவகாரத்தில் வரலாற்றுப் பிழையை முதலமைச்சர் விஜய் செய்து விடக் கூடாது எனப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் மெத்தனம் கூடாது:
கோவை குனியமுத்தூரில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது காவிரி விவகாரம் குறித்து அவர் கூறுகையில், “காவிரிப் பிரச்சனையில் தமிழக அரசு எவ்வித மெத்தனமும் காட்டக் கூடாது. கடந்த 3 மாதங்களில் தமிழகத்திற்கு 40 டிஎம்சி தண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் வராததால், இந்த முறை குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணையைக் கனவுத் திட்டமாகச் செயல்படுத்தத் தீவிரமாக முயல்கிறார்; அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் அவர் நடத்துகிறார். ஆனால், தமிழக அரசோ சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே போதும், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை என நினைக்கிறது. ஒரு காலத்தில் தமிழகத்திற்கு 600 டி.எம்.சி தண்ணீர் வந்து கொண்டிருந்தது; 30 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இருந்தன. ஆனால், அது இப்போது வெறும் 3 லட்சமாகச் சுருங்கிவிட்டது. மாறாக, கர்நாடகத்தில் விளைநிலங்கள் 30 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது,” என வேதனை தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் ரசிகர்களுக்காகப் பின்வாங்குகிறாரா விஜய்?:
தொடர்ந்து பேசிய அவர், “காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மறுக்கும் தமிழக அரசு, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகிறது. தொகுதி மறுவரையறை என்பது மக்கள் பிரச்சனையே இல்லை எனத் தவெக முன்பு கூறியது. ஆனால், இப்போது அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகிறார்கள். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்திக் கர்நாடக அரசுக்கு நெருக்கடி கொடுத்தால், அங்குள்ள காங்கிரஸ் கட்சியும், அங்குள்ள அவரது ரசிகர்களும் தன் மீது வெறுப்பு கொள்வார்கள் என்பதால்தான் தமிழக முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க தயங்குகிறார்,” எனக் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
பிரதமரைச் சந்திக்க வலியுறுத்தல்:
“காவிரி விவகாரத்தில் வரலாற்றுப் பிழையை முதலமைச்சர் விஜய் ஒருபோதும் செய்து விடக் கூடாது. உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கூட்டம் நடத்த வேண்டும். மேலும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளையும் அழைத்துக் கொண்டு நேரில் சென்று பிரதமரைச் சந்தித்து மனு அளிக்க வேண்டும். பிலிகுண்டுலுவில் தண்ணீர் திறந்து விடும் அதிகாரம் நடுநிலையோடு இருக்கும் ஒரு அமைப்பிடம் மட்டுமே இருக்க வேண்டும்,” என்று அவர் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் – சரமாரி கேள்வி:
தமிழ்த்தாய் வாழ்த்துக்குச் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியிருக்க வேண்டியதுதானே? ஏன் இவர்கள் அங்கே குனிந்து கொண்டு சென்றார்கள்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
மேலும், “மத்திய அரசுடன் மோதல் போக்கு இல்லை என்றால், அவர்களிடம் சரணாகதி அடையத் தயாராக இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்பதை இவர்களால் உண்மையிலேயே நடைமுறைப்படுத்த முடியுமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்த்துத்தான் சொல்ல முடியும்,” என்று தெரிவித்தார்.
#CauveryIssue #DrKrishnasamy #PuthiyaTamilagam #MekedatuDam #ChiefMinisterVijay #ThalapathyVijay #TVKGovernment #TamilThaiVaazhthu #TNPolitics #TamilNaduNews #Coimbatore #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates