சென்னை:
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
காவலர் வீரவணக்க நாள்:
அக்டோபர் 21-ஆம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959-ஆம் ஆண்டு இதே நாளில், லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
மலர் வளையம் வைத்து மரியாதை:
கடந்த ஓராண்டில் பணியின்போது வீரமரணம் அடைந்த தமிழ்நாடு காவல்துறையினர் உள்ளிட்ட, நாடு முழுவதும் உள்ள துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், முதலமைச்சர் விஜய் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து டிஜிபி அலுவலகத்தில் முதலமைச்சருக்குக் காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் டிஜிபி அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் மரக்கன்று நட்டு வைத்தார். நிகழ்வு முடிந்து புறப்பட்ட முதலமைச்சர், தன்னைக் காணக் கூடியிருந்த மக்களை நோக்கிக் கை அசைத்தார்.
காவலர்களுக்கு வீரவணக்கம்:
முன்னதாக முதலமைச்சர் வெளியிட்டிருந்த சமூக வலைதளப் பதிவில், 1959-ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காப்பதற்காக வீரமரணமடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகத்தைப் போற்றும் இந்த நாளில், நாட்டில் அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்டும் உயரிய கடமையில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த காவல்துறையினர் அனைவருக்கும் வீரவணக்கங்கள். இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், குற்றச் சம்பவங்கள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, துணிவுடனும் விழிப்புடனும் பணியாற்றும் காவலர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. கடமையின் பாதையில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துகிறேன். காலநேரம் கருதாமல் அயராது உழைத்து நாட்டின் அரணாகத் திகழும் காவல்துறையினரின் உன்னதப் பணிகளைப் போற்றிடுவோம் என்று தெரிவித்திருந்தார். பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்குக் காப்பீட்டுத் தொகையையும் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
#CMVijay #PoliceCommemorationDay #TNPolice #Tribute #TVKGovt #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive