சென்னை
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீனின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்து நடந்தது எப்படி?:
இன்று அதிகாலை ஏ.ஆர்.அமீன் தனது நண்பர் பார்கவ் என்பவருடன் கோயம்பேட்டில் இருந்து காரில் வந்துள்ளார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே அவரது கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கால் டாக்சி மீது கார் மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஏ.ஆர்.அமீன், அவரது நண்பர் பார்கவ் மற்றும் கால் டாக்சி ஓட்டுநர் ஆகிய அனைவரும் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சி:
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளான சம்பவம், தமிழ் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்:
மேலும், இந்தக் கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.அமீன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் உடனடியாக சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் சிகிச்சை முடிந்து பாதுகாப்பாக வீடு திரும்பினர். மேலும், எதிரில் வந்த கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அவரும் வீடு திரும்பியதாகப் போலீசார் தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணிப் பாடகராக ஏ.ஆர்.அமீன்:
உலக இசையரங்கில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் மகன் பாடகர் ஏ.ஆர்.அமீன். குழந்தை பருவம் முதல் தனது தந்தை போல இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அமீன், கடந்த 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த ’ஓ காதல் கண்மணி’ படத்தில் பாடகராக அறிமுகமானார்.
இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பாடல் பாடி மக்களிடையே பிரபலமானார். மிகவும் மெல்லிய குரலுக்குச் சொந்தக்காரரான ஏ.ஆர்.அமீன், பின்னர் நடிகர் சிலம்பரசன் நடித்த ‘பத்து தல’ படத்தில் ‘நினைவிருக்கா’ என்ற பாடலை பாடினார். பின்னர் ராம் சரண் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ படத்திலும் ‘சிக்ரி’ என்ற பாடலையும் பாடியுள்ளார்.
மேலும், இந்தியில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘bheegi bheegi’ என்ற ஆல்பம் பாடலையும் இவர் பாடினார். தொடர்ந்து பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பிலும் ஆல்பம் பாடல் மற்றும் பல்வேறு திரைப்படங்களில் பல பாடல்களைத் தொடர்ந்து பாடி வருகிறார். இவரும் தனது தந்தை ஏ.ஆர்.ரகுமானை போல இசைத்துறையில் மிகப்பெரிய அளவில் பிரபலமாவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
#ARRahman #ARAmeen #CarAccident #Chennai #Kathipara #KollywoodNews #TamilCinema #TrendingTN #ViralNewsTN #LatestNewsTN #TamilNaduNews