பயிற்சியின் போது பந்து கழுத்தில் தாக்கியதால் இளம் வீரர் பென், மரணம் அடைந்தார். ஆஸ்திரேலியாவின் 17 வயது கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின். பெர்ன்ட்ரீ கல்லி, ராவ்வில்லே, எடிசன் பார்க் கிளப் அணிகளுக்காக விளையாடினார்.
‘டி-20’ போட்டிக்கு தயாராகும் வகையில், மெல்போர்னின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள பெர்ன்ட்ரீ கல்லி மைதானத்தில் சக வீரர்களுடன் இணைந்து, கடந்த அக். 28ல் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது ‘த்ரோ டவுன்’ முறையில் சக வீரர் ஒருவர் வீசிய பந்தை எதிர்கொண்டார் பென். தலையில் ‘ஹெல்மெட்’ அணிந்திருந்த போதும், பந்து கழுத்து, தலைப் பகுதியில் பலமாக தாக்கியது. உடனடியாக மயங்கி சரிந்த இவரை, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இங்கு ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்டு சிகிச்சை தரப்பட்டது. எனினும், இரண்டு நாள் சிகிச்சை பலன் தராத நிலையில், பென், மரணம் அடைந்தார்.
பென் தந்தை ஜேஸ் ஆஸ்டின் சார்பாக, விக்டோரியா கிரிக்கெட் போர்டு வெளியிட்ட செய்தி:
எங்கள் குடும்பம், நண்பர்களின் ஒளி விளக்காக இருந்தார் பென். அவரது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக இருந்த கிரிக்கெட்டை, அதிகம் நேசித்தார். துரதிருஷ்டவசமான சம்பவம், பென்னை எங்களிடம் இருந்து பறித்து விட்டது.
பென்னுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசிய சக வீரரை, எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து அதிகம் பாதித்து இருக்கும். அவருக்கு என்றும் ஆதரவாக இருப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென் துவக்கத்தில் கால்பந்து வீரராக இருந்தார். ஹாக்ஸ் ஜூனியர் கால்பந்து கிளப் அணிக்காக 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
* பிரிமியர் கால்பந்து தொடர் பைனலில், பவுண்டரி நடுவராக தேர்வு செய்யப்பட்டார்.