சென்னை
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கரும்பு விவசாயிகளுக்கு திமுக அரசு எதுவுமே செய்யாதது போன்ற தோற்றத்தை உருவாக்கத் தவெக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல் என்று முன்னாள் அமைச்சர் ரா.ராஜேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தவெக அரசின் தவறான அறிக்கை:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 10.08.2026 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து தவெக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த 5 ஆண்டுகளில் கரும்பிற்கான சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.156 மட்டுமே உயர்த்தப்பட்டதாகவும், ஓராண்டில் மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.134-க்கு மேல் உயர்த்தப்படுவது வரலாற்றிலேயே முதல்முறை’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான மற்றும் உண்மைக்கு மாறான செய்தியாகும்.
திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட கரும்பு விலை:
கரும்பு விவசாயிகளின் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்களின் கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில், கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,750-லிருந்து ரூ.750 உயர்த்தப்பட்டு, டன் ஒன்றுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டது.
சிறப்பு ஊக்கத்தொகை விபரம்:
மாநில அரசால் கரும்புக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்பட்டுள்ளது:
-
2020 – 2021 அரவைப்பருவம்: டன் ஒன்றுக்கு ரூ.192.50
-
2021 – 2022 அரவைப்பருவம்: டன் ஒன்றுக்கு ரூ.195
-
2022 – 2023 அரவைப்பருவம்: டன் ஒன்றுக்கு ரூ.195
-
2023 – 2024 அரவைப்பருவம்: டன் ஒன்றுக்கு ரூ.215
-
2024 – 2025 அரவைப்பருவம்: டன் ஒன்றுக்கு ரூ.349
ரூ.2,031 கோடி நிதி ஒதுக்கீடு:
2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் 5,77,755 கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையாக அவர்களுடைய வங்கிச் கணக்கில் நேரடியாக ரூ.1,094.27 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு கிரையத் தொகையைத் தாமதமின்றி உடனடியாக வழங்குவதற்காக, ஆண்டுதோறும் வழிவகைக் கடனாகக் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.937.20 கோடி வழங்கப்பட்டது.
இவ்வாறாக, கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரையத் தொகையைத் தாமதமின்றி வழங்குவதற்காக மட்டுமே ரூ.2,031.47 கோடி வழங்கி, கரும்பு விவசாயிகளின் நலனைக் காத்தவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என ரா.ராஜேந்திரன் தனது அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
#SugarcaneFarmers #RRajendran #DMK #TVKGovernment #ChiefMinisterVijay #ThalapathyVijay #MKStalin #TamilNaduNews #Chennai #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates