சென்னை
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட விவகாரத்தில், முன்னாள் வட்டாட்சியர் வி.அய்யாச்சாமிக்கு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையகம் விளக்கம் கேட்டு அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை:
குஜிலியம்பாறை வட்டாட்சியராகப் பணியாற்றிய வி.அய்யாச்சாமி, தனது வட்டத்திற்குட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) கட்சி நிர்வாகிகளின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்குள் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்குச் சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டிருந்தார்.
விதிமீறல் குற்றச்சாட்டு:
வட்டாட்சியராகப் பணியில் சேர்ந்த 10 நாட்களிலேயே மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரியாமல் அவர் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் இந்தச் சுற்றறிக்கை வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்றதால் அப்பகுதியில் நிர்வாகச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வருவாய் நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது. இது அரசுப் பணியாளர் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய செயல் எனவும் அந்த நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
15 நாட்களுக்குள் விளக்கம்:
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் வட்டாட்சியர் வி.அய்யாச்சாமி அடுத்த 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்கத் தவறினால், அவர் மீது துறைரீதியான கடும் மேல்நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
#Gujiliyamparai #TahsildarNotice #DindigulNews #CPIM #CPI #TamilNaduGovernment #RevenueDepartment #TamilNaduNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates