சென்னை
தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்குக் கனிமங்களைக் கொண்டு செல்லத் தடை விதித்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்கத் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனிமப் போக்குவரத்து தடைக்கான பின்னணி:
தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமானப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதிச் செய்யவும், செயற்கை விலையேற்றத்தைத் தடுக்கவும், தமிழ்நாடு சட்டவிரோதக் கனிமச்சுரங்கம், கனிமப் போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி திருத்தம் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், காரைக்கால், புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்குக் கருங்கல், ஜல்லிக்கற்களைக் கொண்டு செல்லத் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு இடைக்காலத் தடை விதித்துத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
தடையை எதிர்த்து வழக்கு:
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் இந்தத் தடை உத்தரவை ரத்து செய்யக் கோரியும், திருத்தப்பட்ட விதிகளைச் செல்லாது என அறிவிக்கக் கோரியும் மது பிரேமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றத்தில் மனுதாரர் வாதம்:
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 10) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “திருத்த விதிகளுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும். உரிய உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்கள் தங்களுக்குச் சொந்தமானது. எனவே, அவற்றை எங்கு விற்க வேண்டும் என முடிவெடுக்க மனுதாரருக்கு உரிமை உள்ளதால், தமிழ்நாடு அரசின் மூன்று மாதத் தடைக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்,” என்று வாதிட்டார்.
தமிழ்நாடு அரசுக்குப் பதிலளிக்க உத்தரவு:
மனுதாரர் தரப்பின் இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு குறித்து இரண்டு வாரங்களில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
#MadrasHighCourt #MineralTransportBan #TNGovernment #TamilNaduNews #Chennai #GravelMining #TNPolitics #TrendingTN #LatestNewsTN #ViralNewsTN #TNNewsUpdates