சென்னை
தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று காரசாரமாக நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, முந்தைய ஆட்சியின் குற்றச்சாட்டுகள் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆவேசமாகக் குறிப்பிட்ட கருத்துகள் பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
ஆதாரம் கேட்ட திமுக எம்.எல்.ஏ:
விவாதத்தின் போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குறித்து திமுக எம்.எல்.ஏ ஐ.பெரியசாமி பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். இதற்கு அத்துறை அமைச்சர் என்.ஆனந்த் விளக்கமளித்துத் தக்க பதில்களை வழங்கினார். விவாதத்தின் ஊடே குறுக்கிட்ட திமுக எம்.எல்.ஏ., “திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உண்மையான ஆதாரம் இருக்கிறதா?” எனச் சவால் விடும் வகையில் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் விஜய்யின் அதிரடிப் பதில்:
திமுக எம்.எல்.ஏ-வின் இந்தக் கேள்வியைக் கேட்டதும் சட்டென்று எழுந்து பேசிய முதலமைச்சர் விஜய், “இதை நான் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன்… ஆனால் எதிர்க்கட்சியினர் ஆதாரம்… ஆதாரம் என்று திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு நமது நிதி அமைச்சர் பேசும்போது, 3 துறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்ட கோப்புகள் எனது மேசையில் இருப்பதாகத் தெரிவித்தார். அதை அவர் ஒன்றும் போற போக்கில் சாதாரணமாகச் சொல்லவில்லை,” எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
“ஓபன் பண்ண வச்சிராதீங்க!”:
தொடர்ந்து திமுகவினரை எச்சரிக்கும் தொனியில் பேசிய அவர், “உண்மையிலேயே அந்த 3 துறைகளின் கோப்புகள் எனது மேசையில்தான் இருக்கின்றன. அத்தனையும் தகுந்த ஆதாரங்களுடன் இருக்கிறது; அந்த கோப்புகளை என்னை ஓபன் பண்ண வச்சிராதீங்க! எதை எப்போது வெளியிட வேண்டுமோ, அப்போது அனைத்தும் மிகச் சரியாக வெளியிடப்படும்,” என்று பகிரங்கமாக எச்சரித்தார்.
இடைத்தேர்தல் குறித்த பஞ்ச்:
பேரவையில் தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், “மக்களிடம் எப்போது பேச வேண்டும், என்ன பேசணும், எப்படிப் பேசணும் என்று தெளிவாகப் பேசிவிட்டுத்தான் மக்கள் எங்களை அன்பாக, ஆசையாக இங்கே (சட்டசபைக்குள்) கொண்டு வந்து உட்கார வைத்துள்ளார்கள். நான் பேசுவேன்… பேசக்கூடாது என்றெல்லாம் கிடையாது; இடைத்தேர்தலிலாவது சில பேருக்கு நல்லது நடக்கணும்ல…” என்று அதிரடியாகத் தனது பேச்சை நிறைவு செய்தார்.
#ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #TVKGovernment #TNAssembly #TNPolitics #DMK #IPeriyasamy #TamilNaduNews #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates #TamilNaduPolitics