ஒஸ்குட் (Osgoode) பகுதிக்குத் தெற்கே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட கொடூர வாகன விபத்தொன்றில் 8 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக ஒட்டாவா காவல்துறை தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சுமார் 11:50 மணியளவில் ‘டால்மெனி வீதி மற்றும் நிக்சன் டிரைவ்’ (Dalmeny Road and Nixon Drive) சந்திப்பில், பிக்-அப் ரக ட்ரக் (Pickup truck) வாகனமும் எஸ்.யு.வி (SUV) ரக காரும் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, அவசரகால மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மிக ஆபத்தான நிலையில் (Critical condition) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஒட்டாவா அவசர மருத்துவ உதவிப் பிரிவினர் (Paramedics) தெரிவித்தனர். எவ்வாறாயினும், எஸ்.யு.வி காரில் பயணித்த அந்தச் சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக ஞாயிற்றுக்கிழமை மாலை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான எஸ்.யு.வி காரில் இருந்த 40 மதிக்கத்தக்க வயதுடைய பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் (Serious condition) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசர மருத்துவ உதவிப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், பிக்-அப் ட்ரக் வாகனத்தில் இருந்த மற்றொரு 6 வயதுச் சிறுமி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
ஒட்டாவா மற்றும் லீட்ஸ் அண்ட் கிரென்வில் (Leeds and Grenville) ஆகிய இரு பகுதிகளையும் சேர்ந்த அவசர மருத்துவ உதவிப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.