சென்னை:
எம்.எல்.ஏ-க்களை வாங்கத் தெரிந்த முதலமைச்சருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சியான தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது அரசியல் களத்தில் மாபெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அழுகிய வெங்காயம்:
அவர் தனது பதிவில், “உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம்தான் இந்த அரசு என்பதற்கு, கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே மாபெரும் சாட்சி. ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்குக் கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கியிருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு. மகாராஷ்டிரத்தில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், முழுமையாக அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை எப்படியாவது சமாளிக்க, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் அப்படியே அனாதையாக விட்டுவிட்டார்கள். இந்தச் சர்க்கஸ் ஆட்சியைப் போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்கத் தொடங்கியுள்ளது,” என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
வணிகர்கள் மறுப்பு:
தொடர்ந்து அவர், “நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அரசே திட்டமிட்டுப் பொய்ச் செய்திகளைப் பரப்பியிருக்கிறது. அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியைத் திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர். இந்தக் கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை நன்கு அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தைப் பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று ஆணித்தரமாக மறுத்துவிட்டனர். இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் பரிதவித்துக் கதறிக் கொண்டிருக்கிறார்,” என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
24-ஆம் புலிகேசி:
மேலும், “வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி. இந்தத் தரமற்ற வெங்காயத்தைக் கொள்முதல் செய்தவர் யார்? அதற்குப் பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்கப் புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்? ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாய்க்குப் பொன்னி அரிசி வழங்குவதாகச் சொல்லிவிட்டு, ஒப்பந்தம் விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியைப் பாலீஷ் போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே, எப்போதுதான் அந்தக் காலம் வரும்? வெங்காயம் வாங்கக்கூடத் துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் முதலமைச்சர், இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?” என்று உதயநிதி ஸ்டாலின் சரமாரியாகக் கேள்வியெழுப்பியுள்ளார்.
#UdhayanidhiStalin #TVK #OnionPrice #DMK #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive