உலகின் பல்வேறு பகுதிகளில் மோதல்களும் அமைதியின்மையும் நிலவி வரும் இச்சூழலில், உலக மக்கள் அனைவரும் புத்த தர்மத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
களனி நாகானந்த சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற உலக பௌத்த சங்கத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் தேரவாதம், மகாயானம் மற்றும் வஜ்ரயானம் ஆகிய பௌத்த மரபுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 50 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிக்குகள் மற்றும் பிக்குணிகள் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன், சுமார் 800 இல்லறப் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
நாகானந்த சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த ஆண்டு நிறைவு நிகழ்வுகள் எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
உலகின் பல்வேறு பகுதிகளிலும் மோதல்களும் குழப்பங்களும் நிலவுகின்ற இக்காலகட்டத்தில் உலக பௌத்த சங்கத்தின் இந்த மாநாடு நடைபெறுகிறது. இத்தகைய சூழலில் புத்த தர்மம் குறித்து மீண்டும் சிந்திப்பது மிகவும் முக்கியமானதாகும்.
மனிதகுலத்தின் சிந்தனை வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, எமது நாகரிகத்தின் அடித்தளத்தை உருவாக்கிய இந்த மகத்தான தத்துவம், சுமார் ஒன்றரை கோடி மகாயான, தேரவாத மற்றும் வஜ்ரயான பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. அது முழு உலகிற்கும் சொந்தமான என்றும் நிலையான தர்மமாகும் எனத் தெரிவித்தார். (a)