உயிர்த்த ஞாயிறுதாக்குதல்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள மெல்கம் கர்தினால் ரஞ்சித் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புவாய்ந்த தரப்பினரும், இதுதொடர்பான “நடிப்பை” நிறுத்திக்கொண்டு, விசாரணைகளை ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட தேரர், சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புடைய தீவிரவாதக் கருத்துக்களைப் போதிக்கும் நடவடிக்கைகள், பாடசாலைப் பாடப்புத்தகங்கள் முதல் பயிற்சி முகாம்கள் வரை இன்றும் நாட்டில் பரப்பப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தினார்.
சஹ்ரான் போன்ற நபர்களை உருவாக்கியவர்கள் தற்போதைய நிர்வாகத்திற்குள்ளேயே இருப்பதாகவும், தான் சிறையில் அடைக்கப்பட்டாலும் உண்மை மக்களுக்குத் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“உயிர்த்த ஞாயிறுதாக்குதல் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், எந்தவொரு பொறுப்புவாய்ந்த தரப்பினரோ அல்லது தனிநபரோ இதுவரையில் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை. எனவே, விசாரணைகளை வேறு திசைகளில் திருப்புவதை விட, அவற்றை ஒரு சுயாதீன சர்வதேச விசாரணையிடம் ஒப்படைப்பதே சிறந்தது,” என அவர் கூறினார்.
கடந்தகால அரசாங்கங்களில் பணியாற்றிய அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார். இத்தாக்குதல் சம்பவத்திற்கு முன்னரே பொதுபல சேனா இது குறித்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், அத்துடன் பாரம்பரிய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் குறித்துப் புகார் அளித்திருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.