சிறுவர் உரிமைகள் சட்டத்தை வரையறுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (4) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்களை உறுதிப்படுத்துவதற்காக தற்போது காணப்படுகின்ற சட்ட ஏற்பாடுகளுக்கு மேலதிகமான ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்ற வகையில் சட்டமொன்றை இயற்றவேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, ‘சிறுவர் உரிமைகள் தொடர்பான கூட்டிணைப்புச் சட்டம்’ எனும் பெயரிலான சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2024.02.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு சட்டவரைஞரால் சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்கு சமகால அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரம் தேவை என சட்டவரைஞர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கும் சட்டத்தின் பெயரான ‘சிறுவர் உரிமைகள் தொடர்பான கூட்டிணைப்புச் சட்டம்’ என்பதற்குப் பதிலாக ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ என திருத்தம் செய்வது பொருத்தமானதென கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், உத்தேச சட்டத்தில் மேலும் உட்சேர்க்கப்பதற்கு அடையாளங் காணப்பட்டுள்ள விடயங்களை உள்ளடக்கி கருத்தாக்கப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இக்கருத்தாக்கப் பத்திரத்தின் அடிப்படையில், சிறுவர் உரிமைகள் சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.