இந்தியா – இலங்கை இடையேயான உறவு என்பது வெறும் மனிதாபிமான உதவிகளோ அல்லது நெருக்கடிக் கால மேலாண்மையோ மட்டும் அல்ல. மாறாக, இது பிராந்தியத்தின் நீண்டகால ஸ்திரத்தன்மை, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு வலுவான புவிசார் அரசியல் பங்காண்மை என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
தீவுகள் ஆராயுங்கள்
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவர் இதனை குறிப்பிட்டுள்ளதுடன், 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா பில்லியன்கணக்கான டொலர் அவசர உதவிகளை வழங்கியபோதிலும், இந்தியா – இலங்கை உறவு இப்போது வெறும் நெருக்கடி கால உதவியைத் தாண்டி, எதிர்கால பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கட்டமைக்கப்பட்டதொரு நிறுவனப் பங்காண்மையாக பரிணமித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
தீவுகள் ஆராயுங்கள்
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இலங்கையுடனான உறவில் இந்தியா எதையும் திணிக்க முயலவில்லை. இலங்கை அரசாங்கமும் மக்களும் எதை விரும்புகிறார்களோ மற்றும் எதனை முன்னுரிமையாகக் கருதுகிறார்களோ அதற்கேற்ப துணையாக நிற்கவே புது டெல்லி தயாராக உள்ளது.
தீவுகள் ஆராயுங்கள்
இலங்கையின் நிதி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை என்பது இந்தியாவின் மூலோபாய நலன்களுடன் நேரடியாகத் தொடர்புடையது. நிதி ஸ்திரத்தன்மை மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலும் இலங்கை பலமடைவதையே இந்தியா விரும்புகிறது.
பொருளாதார பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் துறை பாதுகாப்பு ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை ஆகும்.
அண்டைய நாட்டில் ஏற்படும் எந்தவொரு சீர்குலைவும் பிராந்தியப் பாதுகாப்பைப் பாதிக்கும் என்பதால், இலங்கையின் அனைத்து துறை சார்ந்த ஸ்திரத்தன்மைக்கும் உறுதுணையாக இருப்பது இந்தியாவின் கடமையாகும்.
தீவுகள் ஆராயுங்கள்
இரு நாடுகளின் தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன. இலங்கை அரசாங்கம் தனது முன்னுரிமைகளைத் தீர்மானிக்கும் பட்சத்தில், அதற்குத் தேவையான தொழில்நுட்ப, நிதி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளது.
இன்றைய சிக்கலான உலகச் சூழலில் பொருளாதாரப் பாதுகாப்பையும், எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பையும் தனித்தனியாகப் பார்க்க முடியாது. இரு நாடுகளும் தங்களது சந்தைகளை பரஸ்பரம் திறந்து கொள்வதும், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதும் இரு நாட்டு மக்களின் எதிர்கால வளத்துக்கு அவசியமானது என்றார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகரிக்கும் வல்லரசுப் போட்டிகளுக்கு மத்தியில், இந்திய உயர்ஸ்தானிகரின் இந்தக் கருத்துக்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகின்றன.
இலங்கையில் பிற வெளிநாட்டுச் செல்வாக்குகள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியா ஒரு ஆதிக்க சக்தியாக அன்றி, இலங்கையின் இறையாண்மைக்கும் தேவைகளுக்கும் மதிப்பளிக்கும் நம்பகமான மூலோபாயப் பங்காளியாக தன்னை முன்னிறுத்த முயல்கிறது.
இலங்கையின் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பைத் தனது சொந்த தேசியப் பாதுகாப்பின் ஒரு பகுதியாகக் கருதும் டெல்லி, பிராந்தியத்தில் தனது மூலோபாய மேலாதிக்கத்தை வலுப்படுத்தவும், அண்டைய நாடுகளுடனான அயல்நாட்டுக்கு முதலிடம் கொள்கையை மேலும் ஆழப்படுத்தவும் இத்தகைய மென்யான இராஜதந்திர அணுகுமுறையைக் கையாண்டு வருவதாகப் புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.