மதுரை:
அன்பில் மகேஸ் வீட்டில் வைத்துப் பணம் பெற்றதற்கான பலத்த ஆதாரங்கள் இருப்பதால்தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மாபெரும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆதாரங்கள் உள்ளன:
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தைத் திறந்து வைப்பதற்காக வருகை தந்த அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அன்பில் மகேஸ் விவகாரத்தில் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. கல்வி நிறுவனங்களிடமிருந்து ஆதாரப்பூர்வமாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மாபெரும் வசூல் நடைபெற்று வந்துள்ளது. எந்தெந்த கல்வி நிறுவனங்களிடம் யார் எவ்வளவு பணம் வசூலித்தார்கள், கட்சி ஃபண்ட் என்ற பெயரில் பள்ளிகளிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பதற்கான முழுமையான விவரங்கள் உள்ளன. யாரிடம் பணம் கொடுக்கப்பட்டது என்பதற்கான பணப் பரிவர்த்தனை ஆதாரங்களும் உள்ளன. குறிப்பாக, அன்பில் மகேஸின் வீட்டிற்குச் சென்று பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இருப்பதால்தான் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லை என்றால் காவல்துறை அவரை ஒருபோதும் கைது செய்திருக்காது,” என்று அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
திமுகவுக்குச் சாடல்:
தொடர்ந்து அரசியல் குறித்துப் பேசிய அவர், “மழையால் வேளாண் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த வெளிமாநிலங்களில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயிர்க்கடன் தள்ளுபடி குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும். திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் கூட மீண்டும் வெற்றி பெற முடியாத நிலைதான் திமுகவுக்கு உள்ளது. அதிகபட்சமாக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது. திமுகவின் எதிர்காலம் இருண்டு விட்டது என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். மீண்டும் எப்போது தேர்தல் வந்தாலும் தவெக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். முதலமைச்சர் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருந்து அனைவரையும் சந்தித்து வருகிறார். தற்போது லஞ்சம் முழுமையாகக் குறைந்துவிட்டது,” என்று அவர் கூறினார்.
தீபாவளி ஏற்பாடுகள்:
மேலும், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாகக் கூடுதல் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கட்டணக் கொள்ளை நடைபெறாமல் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். தீபாவளி பண்டிகையின் போது மின்வெட்டு ஏற்படாமல் இருக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தேவையில்லாமல் மின்தடை செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம். அரசு மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாகச் செய்து வருகிறது. ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை வழங்குவதே எங்களது இலக்கு,” என அமைச்சர் நிர்மல்குமார் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
#AnbilMahesh #MinisterNirmalKumar #DMK #TVK #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive