புதுமுக நடிகர் அறிவழகன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘நெல்லை பாய்ஸ்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் கமல் .ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெல்லை பாய்ஸ்’ எனும் திரைப்படத்தில் அறிவழகன், ஹேமா ராஜ்குமார், வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசாந்த் அர்வின் இசையமைத்திருக்கிறார்.
நட்பை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி. ராஜா தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல். திருமாவளவன், தயாரிப்பாளர்கள் எஸ். தாணு மற்றும் கே. ராஜன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” சென்னை போன்ற மாநகரத்தில் வாழும் இளைய தலைமுறையினரின் நட்பிற்கும், நெல்லை போன்ற தமிழகத்தின் தென்பகுதியில் வாழும் இளைய தலைமுறையினரின் நட்பிற்கும் இடையேயான வேறுபாட்டை மையப்படுத்தி, காதல் உணர்வை கலந்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.