எயார்பஸ் மோசடி குறித்து இடம்பெற்றுவரும் விசாரணைகளில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவின் மனைவி நியோமாலி விஜயநாயக்கவிற்கு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிணையாக வைப்பு செய்த தொகையை பறிமுதல் செய்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியோமாலி விஜயநாயக்கவிற்க்கு வழங்கப்பட்ட பிணை தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
விஜேநாயக்க தலா 20 மில்லியன் ரூபாய் தொடர்பிலான இரண்டு பிணைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
எனினும் விசாரணைகளுக்கு நியோமாலி ஆஜராக தவறியதை தொடர்ந்து அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அந்த பிடியாணையை சர்வதேச பொலிஸாருக்கு அனுப்பிவைக்கவும நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் பிணையாளர்கள் நியோமாலி வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் என தெரிவித்ததுடன் தனது கணவரின் தற்கொலையை தொடர்ந்து அவர் இலங்கை திரும்புவதற்கு அச்சப்படுகின்றார் என நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இருப்பினும் கணவரின் மரணத்திற்கு முன்னரே அவர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறிவிட்டார் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி பிணைப்பணமாக வைப்புச்செய்யப்பட்ட தொகையை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.