சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கார்த்திகாவைக் கைது செய்திருப்பதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாராபுரம் இடைத்தேர்தலின்போது முதலமைச்சர் பிரசாரம் செய்த இடத்தில் அனுமதியை மீறிப் பிரசாரம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதாகக் கார்த்திகா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அராஜகப் போக்குடன் கைது:
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகாவை, இன்றைய தவெக அரசு அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாசிசப் போக்கு:
தேர்தல் நேரத்தில் போடப்படும் வழக்குகளை எல்லாம் காட்டி, தங்களின் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள இன்றைய வன்ம குடோன் ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட பாசிசப் போக்கைக் கையாள்வது வெட்கக்கேடானது என்று அவர் சாடியுள்ளார்.
ஆச்சரியக்குறி அரசு:
ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரைக் கைது செய்ததன் மூலம், நாங்கள் எப்போதும் இவர்களைப் பார்த்துச் சொல்லக்கூடிய Narcissistic Behaviour என்பதை, விஜய் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஒருவேளை உங்கள் கான்வாய் செல்லும்போது மக்கள் யாராவது மனு கொடுக்க வந்தால், வண்டியை நிறுத்தி மனுவை வாங்குவீர்களா? அல்லது, உங்கள் கான்வாய்க்குக் குறுக்கே வந்தார்கள் என்று வழக்குப் பதிந்து கைது செய்வீர்களா? என்ற சந்தேகம் இப்படிப்பட்ட கைதுகளால் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கைது நடவடிக்கையைக் கைவிடுக:
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கார்த்திகா உள்ளிட்ட அக்கட்சியினர் மீதான கைது நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கார்த்திகா உட்பட 9 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு, அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கைது விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரும் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது அதிமுகவும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#EPS #AIADMK #NTK #Karthika #TVKGovt #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive