சென்னை
தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த வாக்குறுதியை எப்படி நம்புவது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் காரசார விவாதம்:
தொகுதி மறுவரையறை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தென் மாநிலங்களில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்,” எனக் குறிப்பிட்டார்.
அமைச்சர் அருண்ராஜ் கேள்வி:
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “முன்னாள் பிரதமர் நேரு, எந்தக் காரணத்தைக் கொண்டும் தென் மாநிலங்களில் இந்தி திணிக்கப்படாது என வாக்குறுதி அளித்திருந்தார். நேரு அளித்த வாக்குறுதியைக் கூட நம்மால் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது, அமித் ஷா அளித்துள்ள வாக்குறுதி எந்த அளவுக்குக் காப்பாற்றப்படும் என்பதை நம்மால் உறுதியாகக் கூற முடியாது. அரசியல் சாசனத்தில் என்ன எழுதப்பட்டுள்ளதோ, அதுதான் நிரந்தரமானது,” என்று சுட்டிக்காட்டினார்.
எடப்பாடி பழனிசாமி பதிலடி:
இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டின் 7.18 சதவீத பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் குறையாமல் பார்த்துக்கொள்ளப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதை நம்பவில்லை என்றால், சட்டமன்றத்தில் அமைச்சர்கள் அளிக்கும் உறுதிமொழிகளையும் எப்படி நம்புவது? ஒரு நாட்டின் பொறுப்புமிக்க அமைச்சர் உறுதிமொழி அளித்தால், அதை நம்பித்தான் ஆக வேண்டும்,” என்றார்.
பணமதிப்பிழப்புடன் ஒப்பிட்ட அமைச்சர் விஸ்வநாதன்:
தொடர்ந்து பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், “சபையில் ஒருவித அச்சம் நிலவுகிறது. தொகுதி மறுவரையறைக்கும் பணமதிப்பிழப்புக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. பணமதிப்பிழப்பை பிரதமர் அறிவித்த போது, நிதியமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்காமல் இரவோடு இரவாகத் திடீரென அறிவித்தார். அதேபோலத் தொகுதி மறுவரையறையும் எப்போது வேண்டுமானாலும் கொண்டுவரப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அதன் அடிப்படையில் தான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.
#Delimitation #MinisterArunRaj #EdappadiPalaniswami #EPS #AmitShah #MinisterViswanathan #TNAssembly #TVKGovernment #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates