சென்னை:
தமிழ்நாடு அரசின் அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய பெண்கள், ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பது அல்லது ஆதார் அங்கீகாரத்தைப் பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆதார் இல்லாத பெண்களுக்கான மாற்று ஏற்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
8 கிராம் தங்கம், பட்டுப் புடவை:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி, அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் பெண்களுக்கு, அவர்களது திருமணத்தின்போது 22 காரட் தங்க நாணயம் 8 கிராம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படுகிறது. இத்திட்டம் சமூக நல இயக்குநரகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் ஆதார் சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகார நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும்.
ஆதார் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?:
ஆதார் எண் இல்லாதவர்கள், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்பாக ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக UIDAI இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதார் பதிவு மையங்களை அணுகலாம். பதிவு மையங்கள் அருகில் இல்லாததால் சிரமம் ஏற்பட்டால், வசதியான இடங்களில் ஆதார் பதிவு முகாம்களை ஏற்படுத்தித் தருமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாற்று ஆவணங்கள் மூலம் சலுகை:
ஆதார் எண் ஒதுக்கப்படும் வரை, ஆதார் பதிவு அடையாளச் சீட்டு அல்லது புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகம், பான் கார்டு, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, 100 நாள் வேலை அட்டை, கிசான் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், அரசு அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்துப் பயன்பெறலாம். இந்த ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட துறையால் நியமிக்கப்பட்ட அலுவலர் சரிபார்ப்பார். கைரேகை தரம் குறைவாக இருந்தால் கருவிழிப் பதிவு அல்லது முக அங்கீகாரம் மூலம் சரிபார்க்கலாம். அதுவும் முடியாவிட்டால், ஆதார் கடிதத்தில் உள்ள QR குறியீட்டைச் சரிபார்த்துத் திட்டப் பயன்களை வழங்கலாம். உண்மையிலேயே தகுதியுடைய பெண்கள் தொழில்நுட்பச் சிக்கல்களால் சலுகைகளை இழக்கக் கூடாது. இதற்காக, மத்திய அரசின் நேரடி நலன் பரிமாற்றத் திட்டம் தொடர்பாக 2017 டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி உரிய மாற்று நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட அக்டோபர் 6 முதல் நடைமுறைக்கு வருகிறது.
#AnnanSeer #Aadhaar #TNGovt #CMVijay #WomenWelfare #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive