இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில்முறை மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் ‘அசிதிசி ஊடகவியல்’ மற்றும் ‘அசிதிசி தொழில்நுட்ப’ கல்வித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி, பாடநெறிகள் ஆரம்பமாவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக 2026 ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களில் முழுநேர அல்லது பகுதி நேர அடிப்படையில் பணியாற்றும், 02 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த 18-55 வயதுக்கு இடைப்பட்ட ஊடகவியலாளர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். விண்ணப்பிக்கும் பாடநெறியானது ஊடகத்துறை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதுடன், விண்ணப்பதாரர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் 2025/2026 ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ ஊடக அடையாள அட்டையைக் கொண்டிருக்க வேண்டும்.
கல்வித்தொகை நிதியுதவியாக முதுகலைப்பட்டம் (PhD) ரூபா 700,000ரூபா வரையும், (MPhil), முதுமாணி மற்றும் சாதாரண பட்டப் படிப்புகளுக்கு அதிகபட்சமாக 350,000ரூபா வரையும் வழங்கப்படும். மேலும், முதுகலை டிப்ளோமா, டிப்ளோமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு அதிகபட்சமாக 200,000ரூபா வரை நிதி ஒதுக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஒருவருக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த அதிகபட்ச நிதி எல்லை ரூபா 350,000/- ஆகும் என்பதுடன், ஒரே பாடத்துறையை உள்ளடக்கிய இரண்டு வெவ்வேறு படிப்புகளுக்கு இரு திட்டங்களின் மூலமும் விண்ணப்பிக்க முடியாது.
தகுதியானவர்கள் அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்படும் தெரிவுக்குழுவினால் நேர்காணல் மூலம் தெரிவு செய்யப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட ‘ஊடகவியல்’ விண்ணப்பங்களை பணிப்பாளர் (ஊடகம்) அவர்களுக்கும், ‘தொழில்நுட்ப’ விண்ணப்பங்களை பணிப்பாளர் (அபிவிருத்தி) அவர்களுக்கும் முகவரியிட்டு, 2026.07.31க்கு முன் “சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, இல. 163, ‘அசிதிசி மெந்துர’, கிருளப்பன மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும். மேலதிக விபரங்கள் மற்றும் மாதிரி விண்ணப்பங்களை www.media.gov.lk என்ற இணையதளத்திலோ அல்லது 011 2513 645 / 071 4 931 696 (திரு. சந்தன) ஆகிய இலக்கங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.