வைபவ் நடிப்பில் உருவாகி வரும் ‘மணிகண்டா’ படத்தின் இரண்டாவது பாடலான ‘கருப்பர் வந்தால் ஐய்யன் வருவார்’ பாடலை படக்குழு நவ.28 வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா இந்தப் பாடலை அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘மணிகண்டா’ படத்தில் இருந்து, ‘கருப்பர் வந்தால் ஐய்யன் வருவார்’ பாடலை வெளியிடுகிறோம். பிரியமான பிரேம் ஜி அமரனின் இசைப் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஜே.கே.சரவணாவின் வரிகளில், வி.எம்.மகாலிங்கம் பாடியிருக்கும் இந்தப் பாடல் ஐயப்பனுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கருப்பர் சாமியின் புகழ் பாடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடலின் பின்பகுதி ஐயப்பனை போற்றிப் பாடுகிறது.
வழக்கமாக கருப்பர் பாடல்கள் ஆக்ரோஷமாகவும், அச்சம் தரும் வகையிலும் இருக்கும். இந்த கருப்பர்சாமி பாடல் ஆர்ப்பாட்டம் இல்லாமல், மனதில் அன்பையும் பக்தியையும் ஊற்றெடுக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.