யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) ஊழியர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி, முருகன் வீதி பகுதியில்: ஸ்ரீலங்கா டெலிகொம் ஊழியர்கள் குறித்த பகுதியில் புதிய தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகளை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அந்த வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், வீதியில் வயர்கள் போடப்பட்டிருப்பது தனது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி ஊழியர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
தர்க்கம் முற்றிய நிலையில், குறித்த நபர் தான் வைத்திருந்த வாளால் ஊழியர்களைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் ஒரு ஊழியர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த ஊழியர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார், வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திய இளைஞனைக் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.