முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவ பயன்பாட்டில் உள்ள காணிகளை சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் இராணுவ முகாம் அமைந்துள்ள காணிகள், கிளிநொச்சி மாவட்டத்தில் கனகாம்பிகை குள காணி மற்றும் இயக்கச்சியிலுள்ள காணிகளை விடுவித்தல் அதன் சாத்தியக்கூறுகள் மற்றும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
வட்டுவாகல் மற்றும் கேப்பாப்புலவு காணி உரிமையாளர்கள் சார்பில் கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்ததுடன், வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு முன்பாக அப் பகுதியில் கன்னிவெடி அகற்றும் பணிகளை நிறைவுசெய்து காணி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.
கேப்பாப்புலவில் உடனடியாக 6.5 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக குறிப்பிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர், மிகுதி காணிகளை விடுவிப்பது தொடர்பில் மாவட்ட மட்டத்தில் குழு அமைக்கப்பட்டு கள நிலைமைகளை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டின் 25 மாவட்டங்களிலும் முப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் ஏற்படும் அசாதாரன மற்றும் இடர் நிலைமைகளின்போது பொலிசாருடன் இணைந்து முப்படையினர் களப்பணியாற்றுவதாகவும், போர் நிறைவுற்ற 2009 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் வரை 9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் இவ் ஆண்டு யூன் மாதம் வரையில் 615 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துடன், தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் ஊடாக மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் கூட்டுறவு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr.செ.திலகநாதன், கிளிேநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், வன்னிப் பிராந்திய கட்டளை தளபதிகள், கிழக்கு கடற்படை தளபதி, பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ர உதவிச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.