இராமாயணா படத்தில் சாய் பல்லவி சீதையாக நடித்தது வெளியானதில் இருந்து அவரை சுற்றி ஏதாவது ஒரு விமர்சனம் வந்து கொண்டே இருக்கிறது.
முதலில் சீதை கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமானவரா? என்ற கேள்வி எழுப்பினார்கள். பின்னர் அந்த கதாபாத்திரத்தில் அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று விமர்சித்தார்கள்.
இப்போது வேறு ஒரு பாடலுக்கு அவர் டான்ஸ் ஆடியதையும் ட்ரோல் செய்து வருகின்றனர். இப்படி தொடர்ந்து வரும் விமர்சனங்களுக்கு சாய் பல்லவி பதிலடி கொடுத்து இருக்கிறார்.
இந்த சூழலில் We The Women நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாய்பல்லவியிடம் சீதை கதாபத்திரம் குறித்த விமர்சனங்கள் பற்றி பேசப்பட்டது.
அதற்கு அவர், “சீதா மாதா எப்படி அழகாக இருக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை சோசியல் மீடியாவில் நான் பார்க்காமல் இல்லை. ஆனால் இது போன்ற விமர்சனங்கள் நம்முடைய மன உறுதியை குறைக்கும். ஆனால் நாம் நம்மை இன்னும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
என்னை பொறுத்தவரை ஒரு மனிதராக என்னால் முடிந்த அளவிற்கு மன உறுதியுடன் இருக்க முயற்சி செய்கிறேன். கருத்துக்கள் என்பவை கருத்துக்கள் மட்டும் தான். நமக்குள் தன்னம்பிக்கையையும், மன உறுதியும் இருந்தால் உலகத்தில் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியும்”. மேலும், “ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரத்தின் ஒரு பகுதியை நம்முடைய மனதிற்குள் சுமந்து செல்வோம். சீதை கதாபாத்திரமும் என்னுள் சில தனிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியது. அந்த மாற்றங்கள் தனக்கு மட்டுமே உரியவை” என்று தெரிவித்திருக்கிறார்.