ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நாளையதினம் (19) நடைபெறவுள்ள தேசிய வெற்றி தினக் கொண்டாட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு இதுவரை எந்த அழைப்பிதழும் வரவில்லை என அவரது ஊடகச் செயலாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்தார்.
பத்தரமுல்லவில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் நாளை (19) “தேசிய வெற்றிக் கொண்டாட்டம்” நடைபெற உள்ளது.
இந்தநிலையில், 5ஆவது நிறைவேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் உபாலி பன்னிலகே கூறியது பொய்யானது என்றும் மனோஜ் கமகே கூறினார்.
வெற்றி தினக் கொண்டாட்டத்திற்கு மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளார் என்று கூறி அமைச்சர் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, வெற்றி தினக் கொண்டாட்டத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழ் ஜனாதிபதி செயலகம் அல்லது பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து தனக்குக் கிடைக்கும் என்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.