பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் உதய குமார வூட்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வதுபிட்டிவல பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் கடையொன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்துமாறு கூறி, மோட்டார் சைக்கிள் சாரதியை திட்டித்தீர்த்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அவரது சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் சேவை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அந்த உப பொலிஸ் பரிசோதகர், மோட்டார் சைக்கிள் சாரதியிடம் “வேண்டுமானால் எனது சீருடையை நீயே போட்டுக்கொள்” என்று கூறும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த உப பொலிஸ் பரிசோதகரின் பணி உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.