சென்னை:
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பிரசவ காலத்தை நெருங்கும் கர்ப்பிணிகள் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் தங்க வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
7 நாட்களுக்கு மருந்து இருப்பு:
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோய் பரவல் தடுப்பு, உயிரிழப்பு தடுப்பு, தடையற்ற மருத்துவச் சேவை ஆகிய மூன்றையும் இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விநியோகம் தடையின்றி இருப்பதை உறுதி செய்து, குறைந்தபட்சம் 7 நாட்களுக்குத் தேவையான அவசரகால இருப்பைப் பராமரிக்க வேண்டும். அத்தியாவசிய மருந்துகள், ஓ.ஆர்.எஸ். கரைசல்கள், பாம்புக்கடி விஷமுறிவு மருந்துகள், குளோரின் மாத்திரைகள் ஆகியவை 7 நாட்களுக்குத் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட வேண்டும். ரத்த வங்கிகள், தடுப்பூசி வசதிகள், மருந்துக் கிடங்குகளை வெள்ள நீர் பாதிக்காத வகையில் உயரமான இடங்களில் அமைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு, எலிக்காய்ச்சல் அபாயம்:
மழைக்குப் பிந்தைய காலத்தில் டெங்கு, எலிக்காய்ச்சல், சிக்குன்குனியா, தீவிர வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படலாம். இதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் நோய்க் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில், மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். முகாம்களில் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமான உணவு, கழிப்பறைகள், கைகழுவும் வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வீடுகள் மற்றும் பொது இடங்களில் கொசுப்புழு உற்பத்தியைக் கட்டுப்படுத்தப் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்:
பொதுமக்கள் குடிநீரைக் கொதிக்க வைத்துப் பருக வேண்டும். வெள்ளநீரால் மாசடைந்த உணவு, குடிநீரைப் பயன்படுத்த வேண்டாம். சாப்பிடும் முன்னும், கழிப்பறையைப் பயன்படுத்திய பின்னும் சோப்பினால் கைகளைக் கழுவ வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாம்புக்கடிக்கு ஆளானவரின் காயத்தை வெட்டுதல், விஷத்தை உறிஞ்சுதல், இறுக்கமாகக் கட்டுதல் போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார்.
#Arunraj #HealthMinister #NortheastMonsoon #PregnantWomen #Dengue #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive