நிலக்கரி இறக்குமதி தொடர்பான சுயாதீன விசாரணைக்கு வழிவிடும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ள முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, இனி நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினராக (Backbencher) அமரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது அமைச்சர் பதவி விலகல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தில் அவருக்கான ஆசன ஒதுக்கீடுகள் செய்யப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் எவ்வித குறுக்கீடுமின்றி சுயாதீனமாக நடைபெறுவதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) ஜயகொடி தனது எரிசக்தி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசியப் பட்டியல் ஊடாக அவர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜயகொடியுடன் இணைந்து அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலவும் பதவி விலகியுள்ளார்.