சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளி ஒருவரைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட லோவர் மெய்ன்லேண்ட் (Lower Mainland) பகுதியைச் சேர்ந்த மசாஜ் சிகிச்சையாளர் (Massage therapist) ஒருவரின் தொழில்முறைப் பதிவை ‘பிரிட்டிஷ் கொலம்பியா நிரப்பு சுகாதார நிபுணர்கள் கல்லூரி’ (CCHPBC) ரத்து செய்துள்ளதுடன், அவர் மீண்டும் விண்ணப்பிப்பதற்கும் 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மசாஜ் சிகிச்சையின் போது, ராஜா இராமசாமி (Raja Ramaswamy) என்ற மசாஜ் சிகிச்சையாளர், பெண் நோயாளி ஒருவரின் அனுமதியின்றி அவரது மார்பகக் காம்பைக் கிள்ளி, நக்கியதன் மூலம் அவருக்குப் பாலியல் வன்புணர்வு இழைத்துள்ளதாக ஒழுக்காற்றுச் சபை தெரிவித்துள்ளது.
இக்குற்றச்சாட்டு தொடர்பாக 2023 ஆம் ஆண்டில் குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இராமசாமிக்கு, 12 மாத கால நிபந்தனையுடனான சிறைத்தண்டனை (Conditional sentence) விதிக்கப்பட்டிருந்தது. அத்தோடு, பாலியல் குற்றவாளிகளின் பதிவேட்டில் (Sex offender registry) 10 ஆண்டுகளுக்கு அவரது பெயரைப் பதிவு செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை இறுதியான மற்றும் உறுதியான ஆதாரமாக ஏற்றுக்கொண்ட ஒழுக்காற்றுத் தீர்ப்பாயம், அவருக்கு எதிராகப் பின்வரும் மேலதிக தண்டனைகளை விதித்துள்ளது:
-
அவரது தொழில்முறைப் பதிவை (Professional registration) உடனடியாக ரத்து செய்தல்.
-
மீண்டும் பணியில் இணைவதற்கு 8 ஆண்டுகள் தடை விதித்தல்.
-
5,000 டொலர் அபராதம் விதித்தல்.
-
10,000 டொலர் வழக்குச் செலவை ஈடு செய்யப் பணித்தல்.
ஒழுக்காற்றுச் சபையின் விபரங்களின்படி, பாதிக்கப்பட்ட பெண் முன்னதாக ‘வெஸ்ட் கோஸ்ட் மசாஜ் சிகிச்சை கல்லூரியில்’ (West Coast College of Massage Therapy) இராமசாமியிடம் மாணவியாகக் கல்வி பயின்றவர் என்பதும், பல வருடங்களின் பின்னரே தற்செயலாக இவரிடம் சிகிச்சைக்கு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த ஒழுக்காற்றுத் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே இராமசாமி தனது தொழில் உரிமத்தை (Licence) ஒப்படைத்திருந்த போதிலும், விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் போது தன்னிச்சையாகப் பதிவைத் துறப்பதன் மூலம் எந்தவொரு தொழில்முறை நிபுணரும் ஒழுக்காற்றுத் தண்டனைகளிலிருந்து தப்பித்துவிட முடியாது என இச்சபை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.