தலைநகர் கொழும்பில் இருந்து மஸ்கெலியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குப் பொருட்களை ஏற்றி வந்த பாரவூர்தி ஒன்று நேற்று (22) இரவு 11 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பு – ஹட்டன் பிரதான சாலையில், மல்லியப்புப் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி, வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மண் திட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் பாரவூர்தியின் சாரதியும் நடத்துனரும் படுகாயமடைந்தனர்.
உடனடியாக மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.