சென்னை
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தவெக அரசின் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை என்றும், வருவாயைப் பெருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.
நிதி மேலாண்மை மற்றும் கடன் சுமை:
புதிய அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்கள் நிதி மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய அரசின் பாதையைத் தீர்மானிப்பது இந்த முதல் 100 நாட்கள்தான். 100 நாள் செயல்திட்டங்களைப் புதிய அரசு வெளியிடுவது வழக்கம்; அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் முதலீடுகள் கிடைக்கும். தவெகவைப் போல் ஏற்கனவே வெள்ளை அறிக்கையை அதிமுக, திமுகவும் வெளியிட்டுள்ளது. வருவாயைப் பெருக்கவோ, வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கவோ எந்த நடவடிக்கையும் இல்லை. நிதி மேலாண்மைக்குச் சரியான பாதை போடப்படவில்லை என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது. 3 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் கடன் சுமை 20 லட்சம் கோடியாக உயர்ந்துவிடும்.
பெயர் மாற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் பள்ளிக்கல்வி:
பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் ஏதுமில்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு ‘வெற்றி’ எனப் பெயர் மாற்றி உள்ளீர்கள். பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியம் முறையாகத் தரப்படுமா என விளக்கம் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 40,000 அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். அவையில் திறம்படப் பேசும் அமைச்சர் ராஜ்மோகன், 40,000 பள்ளிகளுக்குத் தேவையான நிதியைக் கேட்டுப் பெறுவார் என நம்புகிறேன்.
மத்திய அரசிடம் நேரில் பேச வேண்டும்:
பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், சில இடங்களில் பேசினால்தான் தீர்வு காண முடியும். தமிழகத்திற்குத் தேவையான நிதியைப் பெற மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினால் மட்டும் போதாது, நேரில் வலியுறுத்திப் பேச வேண்டும்.
காலிப்பணியிடங்கள் மற்றும் மின்தடை:
தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறைகளில் 13.30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆட்சிக்கு வந்த உடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனக் கூறினீர்கள்; அதனை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறையில் 1.5 லட்சம் காலிப்பணியிடங்களும், மின்சாரத்துறையிலும் பல காலிப்பணியிடங்களும் உள்ளன. மின்துறையில் அதிக காலிப்பணியிடங்கள் இருப்பதன் காரணமாகவே அதிக மின்தடைகள் ஏற்படுகின்றன.
விவசாயிகள் நலன் மற்றும் பிற கோரிக்கைகள்:
கொரோனா காலத்தில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தது அதிமுக அரசு. பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திய எங்கள் ஆட்சிக் காலத்தில் கடன் சுமை குறைவாகவே இருந்தது. மேலும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்:
-
சொத்து வரியைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
அதிமுக கொண்டு வந்த ‘உழவன் செயலி’ திட்டத்தைத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும்.
-
ஓசூரில் உள்ள சர்வதேச மலர் ஏல மையத்தைச் செயல்படுத்த வேண்டும்.
-
மாம்பழ விலை வீழ்ச்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தரப்பட வேண்டும்.
-
தட்கல் முறையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் 65,000 விவசாயிகளுக்கு உடனடியாகப் பம்பு செட் வழங்கப்பட வேண்டும்.
-
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சீமைக் கருவேல மரங்களை அகற்றத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#EPS #EdappadiPalaniswami #TNBudget2026 #TNAssembly #AIADMK #TVKGovernment #ChiefMinisterVijay #ThalapathyVijay #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates