நாளை (நவம்பர் 30) வழமையான பாடசாலை நாளாக இயங்கும் எனத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ, திட்டமிடப்பட்ட அனைத்துக் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளையும் எவ்வித இடையூறுமின்றி எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு சகல பாடசாலைகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (நவம்பர் 29) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நவம்பர் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரமானது, 2026 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணையின் இறுதி வாரமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டில் 197 பாடசாலை நாட்களை நடத்துவதற்கு அமைச்சு ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த போதிலும், ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் அதனால் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டமை ஆகிய காரணங்களால், பாடசாலை இயங்கும் நாட்கள் 186 ஆகக் குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே பாடசாலை நாட்கள் குறைவடைந்துள்ள நிலையில், இனிமேலும் பாடசாலை நாட்களைக் குறைப்பதற்கு எவ்வித இடமும் இல்லை என அவர் வலியுறுத்தினார்.
இதற்கமைய, தற்போது நடைபெற்று வரும் தவணைப் பரீட்சைகள் மற்றும் திட்டமிடப்பட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளை டிசம்பர் 4 ஆம் திகதிக்குள் நிறைவு செய்வதை உறுதிப்படுத்துமாறு அனைத்துக் கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, நாளைய தினத்தை வழமையான பாடசாலை நாளாகக் கருதிச் செயற்படுமாறு பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் கேட்டுக்கொண்ட கல்வி அமைச்சின் செயலாளர், பாடசாலை செயற்பாடுகளும் பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என நம்பிக்கை வெளியிட்டார்.