நாட்டில் இன்புளுவென்சா (Influenza) சுவாச வைரஸ் தொற்று பரவி வருவதால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகள் காணப்படுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொற்று தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் அல்லது பேசும்போதும் வெளிப்படும் சுவாச நீர்த்துளிகள் மூலம் இன்புளுவென்சா தொற்று பரவுவதாக சிரேஷ்ட விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
திடீரென ஏற்படும் காய்ச்சல், குளிர், தொடர்ச்சியான இருமல் மற்றும் அதிக சோர்வு ஆகியவை இன்புளுவென்சாவின் முக்கிய அறிகுறிகளாகும். சிலருக்கு நிமோனியா உள்ளிட்ட தீவிர சுவாசப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நீரிழிவு, இதய நோய், ஆஸ்துமா, சிறுநீரக நோய் போன்ற பாதிப்புகளைக் கொண்டவர்கள் இத்தொற்றினால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடியவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல், நோய் அறிகுறிகள் தென்பட்டால் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்தல் மற்றும் சுயமாக மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்த்து மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.