தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், திருச்செந்தூர் அரோகரா விவகாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் எட்டயபுரம் பட்டாசு ஆலை அனுமதி ஆகியவை குறித்துத் தமிழக அரசை விமர்சித்துப் பேசியுள்ளார்.
முதல்வருக்கு அரோகரா எதற்கு?:
செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், “விஜய்க்கு ஏன் அரோகரா போட வேண்டும்? திருச்செந்தூரில் கந்த சஷ்டி சூரசம்ஹாரத்தின்போது முதல்வருக்கு அரோகரா என்று கூறுகின்றனர். முதல்வருக்கு அரோகரா போட வேண்டிய அவசியம் என்ன? இவர்களுக்கு அரோகரா பற்றித் தெரியுமா? துணிகளைச் சலவை செய்வதற்கு மூட்டையாக எடுத்துச் செல்லும்போதும், பல்லக்கு தூக்கிச் செல்லும்போதும் ஏலேலோ என்று கூறுவதற்குப் பதிலாக அரோகரா என்று கூறுங்கள், நமது சுமைகளைச் சிவபெருமான் தீர்த்து வைப்பார் என்று திருஞானசம்பந்தர் கூறினார். முதல்வருக்கும் அறநிலையத்துறை அமைச்சருக்கும் என்ன அரோகரா தேவை இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆய்வாளருக்கு ஒரு நீதி, எம்.எல்.ஏவுக்கு ஒரு நீதியா?:
தொடர்ந்து பேசிய அவர், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக எம்.எல்.ஏ பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இதே தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் காவல் ஆய்வாளர், காவலர் ஒருவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பியதாக நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். காவல்துறையில் இருக்கக்கூடிய ஆய்வாளருக்கு ஒரு நீதி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவுக்கு ஒரு நீதியா?” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் புரட்சி மற்றும் பட்டாசு ஆலை எதிர்ப்பு:
மேலும் அவர் கூறுகையில், “அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன மாதிரி புரட்சி வரும். நீங்கள் இன்னும் மூன்று ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தால் மக்கள் பின்னங்கால் பிடரியில் அடித்து ஓடுகிற அளவிற்குப் பெரிய புரட்சி வரும். ராஜபக்சேவை ஓடவிட்ட மாதிரி ஜோசப் விஜய்யை மக்கள் ஓடவிடுவார்கள். எட்டயபுரம் பகுதியில் பட்டாசு ஆலைக்கு அனுமதி கொடுத்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். மாவட்ட ஆட்சியர் நிறுத்தி வைத்ததைக் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அனுமதி கொடுத்தால் அது கண்டிக்கத்தக்கது. பட்டாசு ஆலைக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் கட்டாயப்படுத்தினால், அமைச்சரைக் கட்டாயமாக விரட்டியடிப்போம்,” என்று மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார்.
#Markandeyan #DMK #CMVijay #TVKGovernment #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive