சென்னை
தமிழ்நாட்டில் உள்ள தெருக்களில் சாதிப் பெயர்கள் இல்லை என்பதை மாநில அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ரமேஷ் திட்டவட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
எப்.ஐ.ஆரில் சாதிப் பெயர் – அதிர்ச்சியடைந்த நீதிபதி:
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் போலீசார் பதிவு செய்த குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் (FIR) ஒரு குறிப்பிட்ட சாதிப் பெயரைக் கொண்ட தெரு என்று குறிப்பிடப்பட்டிருந்ததைப் படித்துப் பார்த்த நீதிபதி கடும் அதிர்ச்சியடைந்தார்.
அரசுக்கு நீதிபதியின் அறிவுரை:
“2026-ஆம் ஆண்டிலும் இப்படி சாதிப் பெயரைக் குறிப்பிட்ட தெரு உள்ளதா? தெருக்கள் மற்றும் சாலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று 1998-ஆம் ஆண்டே தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாகப் பல உத்தரவுகளை ஐகோர்ட்டும் பிறப்பித்துள்ளது. அப்படியிருந்தும், ஒரு தெருவுக்குக் குறிப்பிட்ட சாதிப் பெயரை வைத்து எப்படி அழைக்க முடியும்? இதனால்தான் அண்மையில், ஆதிதிராவிடர் நலத்துறையை, ‘சமூக நீதித்துறை’ என்று தமிழ்நாடு அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் தெருக்களுக்குச் சாதிப் பெயர் இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தினார்.
தாமாக முன்வந்து வழக்கு விசாரணை:
மேலும், “தமிழ்நாடு முழுவதும் தெருப் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாகத் தாமாக முன்வந்து (Suo Motu) இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கிறேன். இந்த வழக்கை தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்குப் பட்டியலிடும்படி ஐகோர்ட்டு பதிவாளருக்குப் பரிந்துரைக்கிறேன்,” என்றும் நீதிபதி என்.ரமேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
#MadrasHighCourt #JusticeNRamesh #CasteFreeTamilNadu #SocialJusticeDepartment #Namakkal #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates