சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக ஒரு கிலோ சன்ன ரக அரிசியின் விலை 100 ரூபாயை எட்டும் என வெளியாகியுள்ள தகவல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூட்டைக்கு ரூ.600 வரை உயர்வு:
தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் ஒரு மூட்டை அரிசியின் விலை 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை திடீரென அதிகரித்துள்ளது. 1,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டீலக்ஸ் பொன்னி அரிசி தற்போது 1,800 ரூபாய்க்கும், 900 ரூபாய்க்கு விற்கப்பட்ட இட்லி அரிசி 1,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று 25 கிலோ எடை கொண்ட சிவாஜி பொன்னி அரிசி மூட்டை 1,800 ரூபாயிலிருந்து 2,400 ரூபாயாக உயர்ந்துள்ளது.
காரணம் என்ன?:
தமிழகத்தில் சன்ன ரக நெல் உற்பத்தி போதுமான அளவில் இல்லாத காரணத்தால், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தே அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இங்குள்ள ஆலைகளில் அரிசியாக்கி விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் அரிசித் தட்டுப்பாடு நிலவுவதால், கிலோவுக்கு 20 முதல் 40 ரூபாய் வரை விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
வியாபாரிகள் குற்றச்சாட்டு:
இதற்கிடையே, அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளும், காவல்துறையினரும் எல்லையிலேயே தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்புவதாகவும், இதுவே செயற்கையான தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் எனவும் வியாபாரிகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நடவடிக்கைக்கு வலியுறுத்தல்:
விலைவாசி உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தத் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#RicePriceHike #TamilNaduNews #Diwali2026 #PriceRise #Inflation #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive