சென்னை:
தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேற்றைய தினம் கையெழுத்திட ஆஜராகாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் பேரம் பேசியதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீனை செந்தில் பாலாஜிக்கு வழங்கியது. அதன்படி, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை ஆகிய இருவேளையும் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், கடந்த ஐந்து நாட்களாக சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருவரும் முறையாக ஆஜராகிக் கையொப்பமிட்டு வந்தனர். அப்போது அவர்களிடம் குதிரை பேர வழக்கு தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆறாவது நாளான நேற்று (ஜூலை 30) செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இதற்கான காரணம் என்னவென்று காவல் நிலைய தரப்பிற்கும் தெரிவிக்கப்படவில்லை. இந்த வழக்கிற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த செந்தில் பாலாஜி, திடீரென மருத்துவமனைக்குச் சென்றிருப்பதால் ஆஜராகவில்லை என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. இருப்பினும், செந்தில் பாலாஜி தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதேசமயம், அவரது சகோதரர் அசோக் குமார் இன்று காலை வழக்கம் போல் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.
இதனிடையே, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கில், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கச் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த மனுவை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் எந்நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய செந்தில் பாலாஜி தரப்பினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. முன்ஜாமீன் தள்ளுபடியான நிலையில் செந்தில் பாலாஜி காவல் நிலையத்திற்கும் வராததால், அவர் தலைமறைவாகி விட்டாரா என்ற மிகப்பெரிய சந்தேகம் தற்போது வலுத்துள்ளது.
#SenthilBalaji #Absconding #TriplicanePolice #TvkMlaCase #BmNews #TamilNews #BreakingNewsTN #TasmacScam #HighCourt #TamilNaduPolitics #PoliticalUpdate #TamilNewsLive