“மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படாமல் இருந்திருந்தால், அவர்கள் இன்று பல உயர் பதவிகளில் இருந்திருக்க முடியாது. அப்படியிருக்க, தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரம் ஏன் இன்றும் அநீதிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்? அவர்கள் தாங்கள் நம்பிய அரசியல் கொள்கைக்காகப் போராடியவர்கள் என்பதால், அவர்களைச் சாதாரண குற்றவாளிகளாகப் பார்க்க முடியாது.” என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா.சாணக்கியன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து அரசாங்கத்திடம் தெளிவான விளக்கத்தைக் கோரினார்.
பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று அரசாங்கங்கள் பதிலளித்தன. ஆனால், தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்துக் குறிப்பிட்டுள்ளது. எனவே, ஜனாதிபதி இந்த விடயத்தில் கரிசனை கொண்டு, தனது நிலைப்பாட்டை உறுதியாக அறிவிக்க வேண்டும்.”
“யுத்தம் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கேட்டுப் போராடுகிறார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கது. அதேபோன்று, பிள்ளையானை முறையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற எமது நீண்டகாலக் கோரிக்கையையும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.”
அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களில் அரசாங்கம் இரட்டை வேடம் போடாமல், தனது கொள்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.