இனத்தின் அடிப்படையில் டொரொண்டோவில் உள்ள மக்களை வாகனத்தால் மோதிக் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகத் தனது சமூக நலப் பணியாளரிடம் (social worker) தெரிவித்த நபர் ஒருவரை, இந்த வார தொடக்கத்தில் கைது செய்துள்ளதாக ஹாமில்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
நவம்பர் 16 அன்று பிற்பகல் 1:50 மணியளவில் தங்களுக்குத் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை (OPP) மற்றும் டொரொண்டோ காவல்துறை ஆகியவற்றுக்குத் தகவல் வழங்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அத்துடன், குறித்த நபரின் வாகனம் தொடர்பான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 4:30 மணிக்குச் சற்று முன்னதாக, ஸ்கைவே பாலத்தின் (Skyway Bridge) கீழே உள்ள ஈஸ்ட்போர்ட் டிரைவ் (Eastport Drive) பகுதியில் ஹாமில்டன் காவல்துறை அதிகாரிகள் அந்த வாகனத்தைக் கண்டுபிடித்தனர்.
பெயர் வெளியிடப்படாத 55 வயது மதிக்கத்தக்க அந்த நபர், வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட மரண அச்சுறுத்தல் விடுத்தமைக்காகக் கைது செய்யப்பட்டார். அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (19) வெளியிடப்பட்ட காவல்துறை ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட சம்பவங்களை ஹாமில்டன் காவல்துறை தீவிரமாகக் கருதுகிறது. வெறுப்புணர்வைக் கையாள்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நகரத்தை உருவாக்கச் சமூகப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் உள்ளோம்,” என அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட குற்றம் அல்லது சம்பவத்தைப் பாதிக்கப்படுபவர்கள் அல்லது நேரில் காண்பவர்கள் யாரேனும் இருப்பின், அது குறித்துப் புகாரளிக்க நாங்கள் ஊக்குவிக்கிறோம். குற்றச் சட்ட வரம்பிற்குள் வராத சம்பவங்களும் இதில் அடங்கும்,” என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், குறித்த நபர் எந்தக் குழுவினரை இலக்கு வைத்து அச்சுறுத்தல் விடுத்தார் என்ற விவரத்தைக் காவல்துறை வெளியிடவில்லை.